குடும்ப உறுப்பினர்கள் உடல்நலம், மனவளம், மன அமைதி, செல்வ வளம் காக்க வேண்டும்.
தம்பதியரிடையே ரகசியம் இருக்கக் கூடாது.
வரவுக்குள் செலவு செய்தல் வேண்டும்.
தேவைக்கு அதிகமாகப் பொருள் சேர்க்கக் கூடாது.
சிந்தனை, சிக்கனம், சீர்திருத்தம் வேண்டும்.
உறுப்பினர் அனைவரும் உழைத்துண்டு வளம் காத்தல் வாழ்வினை உயர்த்தும்.
குடும்ப உறுப்பினர்களுக்கிடையில் உறுதியான நட்பு, உண்மையான நட்பு, நெருக்கமான நட்பு நிலவ வேண்டும்.
தம்பதியர் நட்புக்காக கற்பைத் தவிர வேறு எதையும் தியாகம் செய்யலாம்.
ஒருவரை மற்றவர் புரிந்துக் கொண்டு மற்றவர் கருத்துக்களை அறிதல், மதித்தல் அவசியம்.
தேவை, அளவு, முறை, காலம் என்பதில் ஏற்படும் வேறுபாடுகளை விட்டுக் கொடுத்தல் மூலம் சரி செய்தால் பிணக்கு எழாது.
தாய்மார்கள் வரவு செலவைத் திட்டமிட்டுச் செய்வதால் பொருளாதாரம் பிணக்கு இருக்காது.
குடும்பத் தலைவருக்குத் தன்முனைப்பு கூடாது.
சலனமற்ற, விசாலமான மனம்தான் எதையும் தாங்கும்.
பிறர் குற்றத்தைப் பெரிது படுத்தாமை, உடன் சுட்டிக் காட்டாமை, விட்டுக் கொடுத்தல், தியாகம் மன்னிப்பு தேவை.
நல்ல கருத்தேயாயினும் வாழ்க்கைத் துணைவர் ஒத்துக் கொள்ளவில்லையெனில் சிறிது காலம் தள்ளி வைத்தல் அவசியம்.
பிறரின் கடுஞ்சொற்களை அவை சொல்லப் படாதவை போல பாவிக்க வேண்டும்.
பால் உறவிலும் விட்டுக் கொடுத்தல் தேவை.
கணவன் - மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் குறை சொல்லக் கூடாது.
குழந்தைகள் முன்பு தம்பதியர் சண்டை சச்சரவு கூடாது.
தம்பதியரின் உறவை மதித்து, பெற்றோர் மக்கள் கூட்டுறவை மேம்படுத்துதல் வேண்டும்.
நட்பிலே கணவன் மனைவி உறவு மிகப் பெருமையுடையது. உடல், பொருள், ஆற்றல், என்ற மூன்றையும் ஒருவருக் கொருவர் மனம் உவந்து அர்ப்பணித்து வாழ்கைத் துணைவராகி இன்ப துன்பங்களில் பங்கு கொண்டு வாழும் பெருமை கணவன் - மனைவி உறவில்தான்.
பொருள் ஈட்டுதலில் இருவரில் ஒருவரோ அல்லது ஒருவருக்கொருவர் ஏற்றத்தாழ்வான திறமையும் பொறுப்பும் உடையவராகவோ இருக்கலாம். ஆயினும் காப்பது, நுகர்வது, பிறர்கிடுவது ஆகிய செயல்களில் இருவரும் சமமான பொறுப்பை ஏற்க வேண்டும்.
வாழ்க்கையிலேயே மேம்பாடாக, நற்றுணையாக மதிக்க வேண்டியது கணவனை மனைவியும் மனைவியைக் கணவனுமே.
கணவன் மனைவி நட்பில் வலிவு பெறாதவர்கள் வாழ்வு குறையுடையதாகவே கருத வேண்டும். எனவே ஒவ்வொருவரும் கணவன் - மனைவி உறவை உயிருக்கும் மேலானதாக மதித்து போற்ற வேண்டும்.
எக்காரணத்திலேனும் இந்த நட்பு முறிந்தால் ஓராண்டு காலம் பொறுத்திருந்து இனி மீலாது என்ற முடிவு ஏற்பட்டு விட்டால்தான் திருமண ரத்துக்கும் மருமணத்திற்கும் முயற்சி மேற்கொள்ளலாம்.
வேறுபட்ட உள்ளங்கள் காலத்தால் ஒன்றுபட இடமுண்டு. உணர்ச்சி வயப்பட்டு விவாகரத்து ஏற்படாதவாறு சமுதாயத்திலுள்ள அறிஞர்கள் தக்க பாதுகாப்பும் அறிவுரைகளும் வழங்க வேண்டும். தகுந்த காரணமின்றி எளிதாகத் திருமண ரத்துக்கு இடமளிக்காத சமுதாயமே ஆன்மிக வலுவிலும், ஒழுக்க உயர்விலும் பெருமைப்படத் தக்கதாக இருக்கும்.
.... மகரிஷி